தமிழக அரசு. மாநிலத்தில் ஆங்காங்கே பெய்த கனமழையால் வீணாகிப்போன நெற்பயிர்களை சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறுவடை பணிகள் நடைபெற்று வந்த வேளையில், மழை பெய்ததால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டும், நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகியும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பா அறுவடை பணிகள் தடைபட்டதாலும், நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்துள்ளதாலும், நெல்லை கொள்முதல் செய்ய முடியாததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 8 லட்சம் ஏக்கரிலான நெற்பயிர்கள் கனமழையில் நனைந்து வீணாகியுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு செலவு செய்த நிலையில் தற்போது நெற்பயிர்களின் சேதத்தால் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை, திறந்திருக்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் மழை காரணமாக நெல்லை கொள்முதல் செய்ய முடியவில்லை, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக மூடி வைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை
சரியாக கணக்கீடு செய்யவும், தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக மூடி வைக்கவும் உரிய நடவடிக்கையை கால தாமதம் செய்யாமல் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு, மழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்