உணவு தானியங்கள் மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

     குறைந்த மனிதத் தலையீடுகள் மற்றும் அதிக வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த உணவு தானியங்கள் மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாட்டில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.  லக்னோவில் உத்தரப்பிரதேச மண்டல இந்திய உணவுக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பேசிய அவர், இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் திறன்மிக்கதாகவும், மேலும் நவீனப்படுத்தவும் அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

     குறைந்த இடவசதியுடன் கிடங்குகளில் அதிக சேமிப்புத் திறனை ஏற்படுத்துவது தொடர்பாகவும் உணவுக் கழக அதிகாரிகள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நெல் மற்றும் கோதுமை கொள்முதலைப் பொறுத்தவரை இந்திய உணவுக்கழகம் மேலும் அதிக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

     உத்தரப்பிரதேசத்தில் கொள்முதல் மையங்களில் மின்னணு பணப்பரிமாற்ற இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு பாராட்டு தெரிவித்த அவர், பிற மாநிலங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இதன்மூலம் விவசாயிகளிடமிருந்து மேற்கொள்ளப்படும் கொள்முதல் நடவடிக்கைகளில் அதிக வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.  மோசமான நிலையில் உள்ள கிடங்குகள் அனைத்தும் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் திரு பியூஷ்கோயல் வலியுறுத்தினார்.  

எம். பிரபாகரன்

Leave a Reply