பாதுகாப்பு சார்ந்த உற்பத்தித் தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளைச்சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலின் போது, சர்வதேச பாதுகாப்பு சார்ந்த தொழில்களுக்கான மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்புப் பொருட்களுக்கான சந்தையாக இந்தியா திகழ்வதாகக் கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான  ஆரோக்கியமான   சூழலை இந்தியா உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர்,  இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில்,  உலக நாடுகளைச்சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.

 பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியைப் பொறுத்த வரை நாடு தன்னிறைவு அடைவதும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இரட்டை இலக்காக இருப்பதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு, இந்தியாவில் பாதுகாப்பு உபகரண உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  தமிழகமும், உத்தரப்பிரதேசமும்  ஊக்கத்தொகை வழங்குவதையும், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களைக் காக்கும் முறையில் சட்டப் பாதுகாப்பு இருப்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

 இந்திய பாதுகாப்பு உற்பத்தியில்  சர்வதேச முதலீடு குறித்த  தங்கள் கருத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தனியார் தொழில் நிறுவனங்களுக்குத் தடையாக உள்ள அம்சங்களை நீக்குவதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்சேர்ந்த தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே, கூடுதல் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply