துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. பசுமைத் துறைமுகம், பசுமைக் கப்பல் போக்குவரத்து என்ற தலைப்பிலான இந்த விவாதத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஜி. அரவிந்த் சாவந்த், திரு மனோஜ் கோட்டக், திருமதி கீதா விஸ்வநாத் வங்கா, அமைச்சகத்தின் செயலர் திரு சுதான்சு பந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
பசுமைக் கப்பல் போக்குவரத்து முன்முயற்சியின் கீழ், 2030 பெரிய துறைமுகங்கள், பசுமை வாயுக்களை உமிழ்வதை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாற்று எரிபொருட்களை பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளை ஏற்படுத்துதல், சூரியசக்தி காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் உள்ள பல பெரிய துறைமுகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அதன் முக்கிய பெரிய துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அளவை 60 சதவீதமாக உயர்த்த உத்தேசித்துள்ளது. தற்போது இந்த துறைமுகங்களில் 10 சதவீதம் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரக்கு கையாளுதலில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு துறைமுகங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் 2030-ம் ஆண்டுக்குள் இதனை வெகுவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரதமர் வெளியிட்ட கடல்சார் கண்ணோட்ட ஆவணம் 2030, நீடித்த கடல்சார் துறை மற்றும் எழுச்சிமிகு நீலப்பொருளாதாரத்தின் பத்து ஆண்டு கால செயல்பாட்டு ஆவணமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை செயல்படுத்த அமைச்சகம் உத்தேசித்துள்ளது என்று கூறிய அமைச்சர், பாரதிப் துறைமுகம், தீன்தயாள் துறைமுகம், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை இதற்காக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, கையாளுதலில் ஹைட்ரஜன் மையங்களாக உருவெடுக்கும் என்றார் அவர்.
திவாஹர்