உலகளாவிய முதலீடு வாய்ப்புக்கான நாடாக இந்தியா விளங்குகிறது; இந்தியாவின் எழுச்சி நிறுத்தப்பட முடியாதது!- குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

உலகளாவிய முதலீடு வாய்ப்புக்கான நாடாக இந்தியா விளங்குகிறது; இந்தியாவின் எழுச்சி நிறுத்தப்பட முடியாதது என்று  குடியரசு துணைத் தலைவர்  திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் புதிய கண்டுபிடிப்பு வசதிக்கான மையத்தை இன்று (28.02.2023) தொடங்கிவைத்து உரையாற்றிய அவர், இந்த தசாப்தத்தின் முடிவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும் என்று உறுதிபட தெரிவித்தார். பொருளாதார தேசியத்திற்கான சிந்தனையையும், கவனத்தையும் மக்களுக்கு நாம் உணர்த்தி ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

2047-ம் ஆண்டின் செயல்வீரர்கள் முன்னால் தாம்  இருப்பதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர் இளமையான மனித ஆற்றலில் இந்தியாவுடன் போட்டியிடும் நாடு உலகில் இல்லை என்றார். சென்னை ஐஐடி-யின் செயல்பாடு குறித்து மிகுந்த மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்த அவர், இதன் தொழில்முனைவுக்கான பிரிவு சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள  300-க்கும் அதிகமான புத்தொழில்களுக்கு உதவி வருகிறது என்றார்.  உலகில் மூன்றாவதாக அதிக எண்ணிக்கையில் யுனிகார்ன்களையும், 80,000-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களையும் கொண்டிருக்கும் இந்தியா, இதிலும் மூன்றாவது பெரிய நாடாகத் திகழ்கிறது என்றார்.

நமது மரபணுவில் புதிய கண்டுபிடிப்புக்கான சிந்தனை உள்ளது என்றும் இதனை தூண்டுவது மட்டுமே நமது பணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது தீர்வுகளுக்கு உண்மையில் புதியன சிந்திக்கும் தேவை உள்ளது என்று அவர் கூறினார்.

நமது வளர்ச்சியின் குறியீட்டில் மக்களின் முயற்சியை இன்னமும் நாம் அனுமதிக்காமல் இருக்கிறோம். கடும் உழைப்பாளிகளான இளைஞர்கள், இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டும். நமது நாடு, நமது சாதனை, நமது முயற்சிகள் என்பவையாக அவை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி தமது உரையில் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றம் விவாதத்திற்கும், கருத்துக்களை எடுத்துரைப்பதற்குமான இடமாகும். அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்வதையும் அவைத் தலைவர் இருக்கைக்கு அருகே வந்து சவால் விடுவதையும் நமது அரசியலமைப்புச் சட்ட பிதாமகர்கள் ஏற்கவில்லை.

அவையில் பேசப்படும் ஒரு கருத்து, நீதிமன்றத்திற்கு செல்ல முடியாத, அவதூறு வழக்கு அல்லது குற்ற நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் வெளியே இருக்கும் 140 கோடி மக்களை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. பொறுப்பு இல்லாமல், பதிலளிக்கும் கடமைத்தன்மை இல்லாமல் ஒரு உறுப்பினர் பேசுவதை உரிமை என்பதாக எடுத்துக்கொள்ள இயலாது.

அவையில் எந்தத் தகவலையும் எடுத்துரைக்கலாம். இது ஜனநாயக உணர்வு. ஆனால் கூறப்படும் தகவல் உண்மையானதாக, அதிகாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும். கூறப்படும் தகவலுக்கு  பொறுப்பேற்கவும் வேண்டும். அவ்வாறு இல்லாத போது உரிமை மீறல் என்பது நாடாளுமன்ற நடைமுறையாக உள்ளது. அவ்வாறு உரிமை மீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகாது என்று அவர் கூறினார்.

 இந்த நாட்டை 2047-க்கு கொண்டு செல்ல வேண்டிய தருணத்தில் அனைத்தையும் அரசியலாக்குவதை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர்கள் முற்போக்கு வழியிலான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்  திரு கே. பொன்முடி, ஐஐடி இயக்குனர் திரு வி. காமகோடி  உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  புதிய கண்டுபிடிப்பு மையத்தில் ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய  ஃபார்முலா கார், மின்கலக்கார் போன்றவற்றை பார்வையிட்டு அவர்களுடன் குடியரசு துணைத்தலைவர் கலந்துரையாடினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply