ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரை.

ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொளி செய்தியை வழங்கினார்.

அதில் உரையாற்றிய அவர், தனது ஜி20 தலைமைத்துவத்திற்கு ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை இந்தியா ஏன் தேர்வு செய்தது என்பதை அடிகோடிட்டுக் கூறினார். நோக்கம் மற்றும் செயல்பாட்டிற்கான ஒற்றுமையின் அவசியத்தை அது எடுத்துரைப்பதாக அவர் விளக்கம் அளித்தார். பொதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான நோக்கங்களை அடைவதற்கான ஒற்றுமை உணர்வை இந்தக் கூட்டம் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

உலகளவில் பலதரப்பு அமைப்புகள் தற்போது நெருக்கடிகளை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய ஆளுகையின் கட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இரண்டு முக்கிய செயல்பாடுகளை சுட்டிக் காட்டினார். முதலாவதாக போட்டித் தன்மை வாய்ந்த நலன்களை சமன்படுத்தி எதிர்கால போர்களை தடுப்பது; இரண்டாவது, பொதுவான நலன்களில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது என்று அவர் விளக்கினார். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, தீவிரவாதம் போன்றவற்றை குறிப்பிட்டு இந்த இரண்டு இன்றியமையாத விஷயங்களிலும் உலகளாவிய ஆளுகை தோல்வி அடைந்ததாக பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இந்த மோசமான தோல்வியின் விளைவுகளை வளரும் நாடுகள் சந்தித்து வருவதாகவும், பல ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு  நிலையான வளர்ச்சியைத் திரும்பப் பெறும் அபாயத்தில் உலகம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தங்கள் மக்களுக்கு உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில்  நிலையற்ற கடன்களால் ஏராளமான வளரும் நாடுகள் தடுமாறி வருவதாக பிரதமர் தெரிவித்தார். வளமான நாடுகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதலால் வளரும் நாடுகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். “உலகின் தெற்கு நாடுகளுக்காக குரல் கொடுக்க இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் முயன்றுள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர், தனது முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டோரின் அவலங்களைக் கேட்காமல் உலகளாவிய தலைமைத்துவத்தை எந்த ஒரு குழுவாலும் கோர முடியாது என்று தெரிவித்தார்.

உலகளவில் வேற்றுமைகள் நிறைந்த சூழலில் இன்றைய கூட்டம் நடைபெறுவதாகக் கூறிய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் என்ற அளவில் புவிசார் அரசியல் பதட்டங்களால் விவாதங்கள் பாதிக்கப்படுவது இயற்கையானது தான் என்று தெரிவித்தார். “இது போன்ற பதட்டங்களுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பது குறித்த நமது நிலைகளையும் கண்ணோட்டங்களையும்  கொண்டிருக்கிறோம்”, என்று பிரதமர் கூறினார். உலகின் முன்னணி பொருளாதரங்கள் என்ற அளவில், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் நலன் சார்ந்த பொறுப்பும் நம்மிடம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். “வளர்ச்சி, மேம்பாடு, பொருளாதார மறுசீரமைப்பு, பேரிடர் நெகிழ்திறன், நிதி நிலைத்தன்மை, நாடு கடந்த குற்றம், ஊழல், தீவிரவாதம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சவால்களை சுமுகமாக்குவது தொடர்பாக ஜி20 அமைப்பை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன” என்று கூறிய பிரதமர், இது போன்ற அனைத்து துறைகளிலும் ஒருமித்த கருத்தை உருவாக்குவது மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனை ஜி20 பெற்றுள்ளது என்று தெரிவித்தார். நம்மால் இணைந்து தீர்க்க முடியாத பிரச்சனைகள், வழியில் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். காந்தி, புத்தர் ஆகியோர் பிறந்த மண்ணில் இந்தக் கூட்டம் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர்,  பிரிவினையில் அல்லாமல் நம்மை இணைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதை வலியுறுத்தும் இந்தியாவின் கலாச்சார பண்புகளை உந்து சக்தியாகக் கொள்ளுமாறு பிரமுகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உலக நாடுகள் சந்தித்த கோரமான பெருந்தொற்றினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், அழுத்தம் மற்றும் இடர்பாடுகளின் காலங்களில் உலகளாவிய விநியோகச் சங்கிலி எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார். நிலையான பொருளாதரங்கள், திடீரென கடன் மற்றும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, நமது சமூகங்கள், பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புமுறைகள் மற்றும் உள்கட்டமைப்பில் நெகிழ்தன்மை ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். “ஒருபுறம் வளர்ச்சி மற்றும் செயல்பாடு, மறுபுறம் நெகிழ்தன்மை என இரண்டிற்கும் இடையே சரியான சமநிலையை கண்டறிவதில் ஜி20 முக்கிய பங்கு வகிக்கிறது”, என்று அவர் கூறினார். இணைந்து பணியாற்றுவதன் வாயிலாக இந்த சமநிலையை சுலபமாக அடைய முடியும் என்று அவர் யோசனை தெரிவித்தார். கூட்டு மதிநுட்பம் மற்றும் திறனின் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி, வேற்றுமையைக் களைந்து, இலக்கை நோக்கிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் செயல்திறன் வாய்ந்த தீர்வுகள் இன்றைய கூட்டத்தில் எட்டப்படும் என்று தாம் நம்புவதாகக் கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply