செயல்திறன் மிக்க தொழில்நுட்பத்தின் மூலம் பொது விநியோக முறையை நவீன முறையில் விரைந்து செயல்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

செயல்திறன் மிக்க தொழில்நுட்பத்தின் மூலம் பொது விநியோக முறையை நவீன முறையில் விரைந்து செயல்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், நவீன பொது விநியோக நடைமுறை உடனடித் தேவை என்றும் அதை விரைந்து அமல்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மனித தலையீட்டைக் குறைத்து தானியங்கி நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுள்ள செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். பொது விநியோக முறையில் உணவு தானியங்களின் விநியோகச் சங்கிலியில் வெளிப்படைத் தன்மை மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உணவு தானியங்கள் சேமிப்பைப் பொறுத்தவரை இந்திய உணவுக் கழகக் கிடங்குகளை 5 நட்சத்திரத் தகுதி கொண்டதாக மேம்படுத்தி வருகிறது என்றார். மாநில அரசுகளும் தங்களது உணவுக் கிடங்குகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் பங்கேற்றதற்காக மாநிலங்களின் உணவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஏழைகளுக்கு, உரிய நேரத்தில் உரிய உணவு தானியங்கள் சென்றடைய அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, பொது விநியோக நடைமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார். பொது விநியோக முறையில் சிறு தானியங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கருத்தரங்கின் போது சிறு தானியங்களின் கொள்முதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. சிறு தானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் மாநில அரசுகள் சிறு தானியங்களுக்கான கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

திவாஹர்

Leave a Reply