நாடு முழுவதிலும் இருந்து நான்கு கோயிலுக்கு செல்லும் யாத்ரிகர்களுக்காக வலிமையானச் சுகாதார உதவி மற்றும் அவசரகால மேலாண்மை உள்கட்டமைப்பை அரசு விரைவில் ஏற்படுத்த உள்ளது. இந்த 3 அடுக்கு கட்டமைப்பு பயணத்தின் போது தேவைப்படும் யாத்ரிகர்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 4 கோவில்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான யாத்ரிகர்களின் உடல்நலன் மற்றும் அவசரகால உள்கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு உதவி செய்ய வேண்டுமென்று உத்தராகண்ட் மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் தன்சிங் ராவத் அமைச்சரைச் சந்தித்து கேட்டுக் கொண்டதற்குப் பிறகு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு தெரிவித்தார். கடினமான பாதை மூலம் யாத்ரிகர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாக யாத்ரிகர்கள் உயிரிழந்தது குறித்தும் மத்திய சுகாதார அமைச்சரிடம் உத்தராகாண்ட் மாநில சுகாதார அமைச்சர் எடுத்துரைத்தார். உயிரிழந்த யாத்ரிகர்களில் பெரும்பாலானோர் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த டாக்டர் மாண்டவியா, யாத்ரிகர்களின் பாதுகாப்பிற்காக அரசு முழு உதவி அளிக்கும் என்று உறுதி அளித்தார். வருகை தரும் யாத்ரிகர்களுக்காக சுகாதார அவசரகால உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். யாத்ரிகர்கள் செல்லும் வழித்தடங்களில் உயிர்க்காக்கும் உபகரணங்களுடன் கூடிய அவசரகால ஊர்திகள் சேவை தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். யாத்திரை காலத்தின்போது மருத்துவ உதவி செய்ய முதுநிலை மருத்துவ மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, தூன் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் உதவியுடன் அவசரகால மருந்துகள் யாத்ரிகர்களுக்கு வழங்கப்படும் என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
திவாஹர்