இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் முக்கிய ஆராய்ச்சி நிறுவனமான ராஜஸ்தானின் பிகானரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில், கேமல் தயாரிப்பு செயலாக்கப் பயன்பாடு மற்றும் பயிற்சிப் பிரிவை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா நேற்று திறந்து வைத்தார்.
மையத்தைச் சுற்றிப் பார்த்த அமைச்சர், விஞ்ஞானிகள் மற்றும் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடினார். பயிற்சிப் பிரிவைத் திறந்து வைத்துப் பேசுகையில், “பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊரக வருவாயைப் பெருக்கும் முக்கிய காரணியாக கால்நடைப் பராமரிப்புத் துறை வளர்ந்து வருவதால் தொழில்நுட்ப இடையீடு, முதலீடுகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன”, என்று அவர் கூறினார். கால்நடைத் துறையின் வளர்ச்சியில் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சிப் பிரிவின் திறப்பு விழாவிற்குப் பிறகு, கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்திய தேசிய கலாச்சார திருவிழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். முக்கிய பிரமுகர்களுடன் உரையாடிய அவர், பல்வேறு துறைகளில் இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த, பிரசித்திப் பெற்ற கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பை இது போன்ற நிகழ்வுகள் வழங்குவதாகக் கூறினார்.
இந்த விழாவில் சுமார் 1000 கலைஞர்களும், கைவினைக் கலைஞர்களும் கலந்து கொண்டு, இந்தியாவின் பாரம்பரிய, பழங்குடி மற்றும் புகழ்பெற்ற கலை வடிவங்களை பிரம்மாண்ட முறையில் வெளிப்படுத்தினார்கள்.
எம்.பிரபாகரன்