மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு 2023 மார்ச் 6, முதல் அம்பத்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் 2-வது நாளான இன்று, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமாகக் கலந்துகொண்டனர். இன்றைய இரண்டாம் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்ட விழிப்புணர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பார்வையற்ற வழக்கறிஞர் கற்பகம் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்கென உள்ள சட்டங்கள் குறித்து விளக்கினார். போக்சோ சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது, விசாகா சட்டம் எப்படி இயற்றப்பட்டது என்பது பற்றிய தகவல்களை அவர் தெரிவித்தார்.

தெரிந்த விவரங்களை மறைப்பதும், போக்சோ சட்டத்தின்படி ஆறுமாத தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  பணியிடங்களில் பாலின ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்கள் விசாகா சட்டத்தின் கீழ் வரும் என்று கூறிய அவர், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றியும் விளக்கினார்.  மாணவ மாணவியரின் சட்டம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் கற்பகம், எந்தக் கட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆணவக் கொலைகளும், கொலை தான் என்று குறிப்பிட்ட அவர், இந்திய சட்டங்களின்படி, விவாகரத்து உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்வதை தடுப்பதற்காக பிரத்யேக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மகளிர் அதிகாரம் அளித்தலில் ஒரு தடை என்ற தலைப்பில், சென்னை மாநகரக் காவல்துறை துணை ஆணையர்  டாக்டர் ஜி வனிதா உரையாற்றினார்.  குடும்பத்தில் பலவீனமான குழந்தைகளைத் தாயார் நன்கு கவனித்து உணவூட்டுவது   போல, சமுதாயத்தில் பலவீனமானவர்களாகக் கருதப்படும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண்கள் இப்போது அதிக அளவில் வெளியே வந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் சென்று வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், பாலின சமத்துவம் என்பது இன்னும் ஏட்டளவில்தான் உள்ளது என்று கூறிய அவர், மகளிர் அதிகாரம் அளித்தலை சமுதாயம் தான், குறிப்பாக ஆண்கள்தான் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெருங்குற்றங்கள் எவை எவை என்று பட்டியலிட்ட டாக்டர் ஜி வனிதா, திராவக வீச்சு, வரதட்சணைக் கொலை, ஆணவக்கொலை, பாலின துன்புறுத்தல், கடத்தல், பெண்களைக் கடத்துதல், பெண்களைக் கேலி செய்தல், இணையவழிக் குற்றங்கள், பின்தொடர்ந்து துன்புறுத்துதல், ஆபாச படங்கள் ஆகியவை இந்தப் பெரிய குற்றங்களில் அடங்கும் என்று தெரிவித்தார். அந்தக் குற்றங்களின் தன்மையை விவரித்த அவர், பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் மனநிலையில் மாறுதல் ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தினார். 2021-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தேசிய குற்ற விகிதம் 4,28,278-ஆக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு ஆதரவளிப்பதை வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்று தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையில் தனிக்குழு  இருப்பதாகத் தெரிவித்தார். பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவதற்கு உள்ள தடையை தூக்கி எறிய வேண்டும் என்றும் அதற்கு ஆண்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.

திவாஹர்

Leave a Reply