திட்டம் உருவாகும் தருணத்திலிருந்தே புத்தொழில் நிறுவனங்களில் சம பங்குதாரராக செயல்படுவதற்கு தொழில்துறையினர் தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

திட்டம் உருவாகும் தருணத்திலிருந்தே புத்தொழில் நிறுவனங்களில் சம பங்குதாரராக செயல்படுவதற்கு தொழில்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர்  ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டுள்ளார். புத்தொழில் நிறுவனங்களை வாழ்வாதாரத்துடன் இணைத்து நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்துவதற்கு மட்டுமல்லாமல், சமகால உலகளாவிய அளவுகோல்களுக்கு இணங்க இந்திய தொழில்துறைக்கு மதிப்பு கூட்டலை ஏற்படுத்தவும் இது அவசியமாகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

ஐதராபாத்தின்  இந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.சி.டி) நடைபெற்ற தொழில்துறையினர், புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான பிரத்தியேக அமர்வில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலத்தின் வழக்கொழிந்த கட்டுப்பாடுகளை நீக்கி, புத்தொழில் நிறுவனங்களும், வர்த்தகங்களும் சுலபமாக பணிகளை மேற்கொள்ளும் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் ஓர் அரசு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல தசாப்தங்களுக்குப் பிறகு உருவாகியிருப்பதாக  பெருமிதத்துடன் கூறினார். நடைமுறை சிக்கல்களைக் களைவதற்காக உறுதியற்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை நிர்ணயிக்குமாறு தொழில்துறை தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தனார்.

மே 2014க்கு பிறகு அறிவியல், தொழில்நுட்பம், புதுமை சூழலியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்தியா இதில் புதிய உயரத்தை அடைந்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், 130 நாடுகளுள், 81-ஆம் இடத்தில் இருந்த இந்தியா, 2022-ஆம் ஆண்டு 40-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சி.எஸ்.ஐ.ஆர் – ஐ.ஐ.சி.டி-யின் உயர்திறன் வாய்ந்த மனித ஆற்றல், ஐதராபாத் மற்றும் இந்திய மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையின் வரமாகத் திகழ்கிறது என்றார் அவர். “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” என்ற நிகழ்வை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply