தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கை கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது. அதோடு, அவர்களது பங்களிப்பின் அறியப்படாத அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: திரு. அர்ஜுன் ராம் மேக்வால்
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 133வது நிறுவன தினத்தை முன்னிட்டு புது தில்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்: 1857 முதல் குடியரசு வரை” என்ற கண்காட்சியை திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தொடங்கி வைத்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த அறியப்படாத வீரர்களின் நினைவுகளைப் போற்றுவதும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய வீராங்கனைகளை முன்னிலைப்படுத்துவதும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் எண்ணம் ஆகும். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்தது வரை தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பை இக்கண்காட்சி சுவாரஸ்யமாக எடுத்துக்காட்டுகிறது என்று திரு. அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். துர்காவதி தேவி மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோரின் உதாரணங்களை மேற்கோள் காட்டி அவர்களின் பங்களிப்பின் முக்கியமான மற்றும் அறியப்படாத அம்சங்களைக் கண்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று திரு. அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. அடக்குமுறை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் போராட்டம், குழந்தைத் திருமணம் மற்றும் தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பது, பெண் கல்வியை எளிதாக்குவது, சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் எப்போதும் பெண்கள் முன்னணியில் இருந்துள்ளனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் இருந்து இந்திய குடியரசுப் பிரகடனம் வரையிலான பாதையில் அழிக்க முடியாத அளவில் பெண்கள் தடம் பதித்துள்ளனர்.
இந்தக் கண்காட்சியானது, காப்பகக் களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான ஆவணங்களைக் காட்சிப் படுத்தியுள்ளது. களஞ்சியத்தின் 80% வரை அதாவது, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கோப்புகள், பிரபலங்களின் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பக நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களின் கணிசமான சேகரிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் அறியப்பட்ட, குறைவாக அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பெண்களின் பங்களிப்புகள் இந்தக் கண்காட்சியில் இருக்கின்றன. இது 1857 முதல் 1950 வரையிலான 93 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தை உள்ளடக்கியது. இந்தப் பெண் தலைவர்கள் பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். பலதரப்பட்ட தொழில்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் (INA), சமூக சீர்திருத்தவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என அங்கீகரிக்கப்பட்டனர்.
30 ஏப்ரல் 2023 வரை சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.
இந்திய தேசிய ஆவணக் காப்பகம் என்பது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமாகும். இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள், தொகுதிகள், வரைபடங்கள், மசோதாக்கள், ஒப்பந்தங்கள், அரிய கையெழுத்துப் பிரதிகள், ஓரியண்டல் பதிவுகள், தனியார் ஆவணங்கள், வரைபடப் பதிவுகள், அரசிதழ்கள் மற்றும் அரசிதழ்களின் முக்கியமான தொகுப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவுகள், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் அடங்கிய பொதுப் பதிவுகளின் பக்கங்கள் இவற்றோடு தடைசெய்யப்பட்ட இலக்கியங்கள், பயணக் கணக்குகள் போன்ற 18 கோடிக்கும் அதிகமான பக்கங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகக் களஞ்சியங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம், பாரசீகம், ஒடியா மொழிகளில் ஓரியண்டல் பதிவுகளின் முக்கியப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
எம்.பிரபாகரன்