கோதுமை மற்றும் கோதுமை மாவு விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு எதிர்கொண்ட முன் முயற்சியின் தொடர்ச்சியாக 6வது மின்னணு ஏலத்தை இந்திய உணவுக் கழகம் 15ம் தேதி நடத்தியது. உணவுக் கழகத்தின் 23 பிராந்தியங்களைச் சேர்ந்த 611 கிடங்குகளிலிருந்து 10.69 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏலத்திற்கு விடப்பட்டது. அதில், 970 ஏலதாரர்களுக்கு 4.91 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டது.
அகில இந்திய சராசரி இருப்பு விலையாக குவிண்டாலுக்கு ரூ.2140.46, ரூ.2214.32 ஆகிய விலைகளில் 6வது மின்னணு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 100 முதல் 499 மெட்ரிக் டன், 500 முதல் 999 மெட்ரிக் டன் வரை ஏலதாரர்கள் ஏலம் கேட்டனர்.
முதலாவது கோதுமை மின்னணு ஏலம் 2023 பிப்ரவரி 01,02 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 1016 பேர் கலந்து கொண்டு 9.13 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை ஏலத்தில் எடுத்தனர்.
6 ஏலங்கள் முடிவடைந்த நிலையில் மொத்தம் 33.77 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வெளிச் சந்தையில் விற்பனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலங்களின் மூலம் வெளிச் சந்தையில் கோதுமை மற்றும் ஆட்டா விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது.
எம்.பிரபாகரன்