தமிழக மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு 2023-2024 நிதிநிலை அறிக்கை அமையவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. குறிப்பாக இன்றைய நிதிநிலை அறிக்கையில் அரசினுடைய கடன்சுமை மேலும், மேலும் அதிகரித்து கொண்டே போவது மிகுந்த கவலையை அளிக்கிறது.
நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஒவ்வொரு அறிவிப்பை உள்ளடக்கி இருக்கிறது. ஆனால் அதன் செயல்பாடும், பயனும், காலக் கெடுவும் எப்படி அமையப் போகிறது என்பதுதான் கேள்வி.ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பயன்தரும் திட்டம் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்குவதற்கான அறிவிப்பு இல்லை. மேலும் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. காலியிடங்களை நிரப்பினாலே லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். தமிழகத்தில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை.
மகளிர்க்கு மாதம் ரூ.1000 வருகிற செப்டம்பர் மாதம் 15-ல் இருந்து அளிக்கப்படும் என்று அறிவிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை அனைவருக்கும் பாரபட்சமின்றி, எந்த கோட்பாடுகளும் இல்லாமல், நடுநிலையோடு அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும் ஐந்து மாதம் தாமதம் காலதாமதம் தவிற்கப்பட வேண்டும். வருகிற மாதத்தில் இருந்தே வழங்க வேண்டும்.
பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிப்பதற்காக ரூ.10 கோடி உயர்த்தி ஒதுக்கீடு செய்து இருப்பது போதுமானதாக இல்லை. இவை கடலில் கரைத்த பெருங்காயம் போல இருக்கிறது. ஆக்கரமிப்பு நிலங்களை மீட்டெடுப்பது தேவையாக இருந்தாலும் அவற்றில் வெளிப்படைத் தன்மையோடு மக்கள் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும்.
திமுக அரசு கடந்த தேர்தல் போது அறிவித்த திட்டங்கள் அதிகம், ஆனால் அவற்றில் நிறைவேற்றியிருப்பது மிகக் குறைவு. ஆக மொத்தத்தில் இந்த நிதிநிலை மக்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும், தேவைகளையும், பூர்த்தி செய்யாத நிதிநிலை அறிக்கையாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்