அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமுதாயத்தினரின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், சமூகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பிரிவினர் உள்ளிட்டோரின் மேம்பாட்டுக்காக திறன் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன.  இது தவிர சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகமும், அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தினரின், சமூக- பொருளாதார  கல்வி  மேம்பாட்டுக்காக பல்வேறு  உதவித் தொகை மற்றும் ஃபெலோஷிப் திட்டங்களை செயல்படுத்துகிறது.

சிறுபான்மையின குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இலவச மற்றும் கட்டாய கல்விக்கு வகை செய்யப்பட்டுள்ளது.

 உயர் கல்வியில் யூஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர்-ன் இளநிலை ஆராய்ச்சி ஃபெலோஷிப் (ஜேஆர்எஃப்) திட்டம் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் பயனளிக்கிறது. இதுதவிர, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான  தேசிய ஃபெலோஷிப் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவர்களும் பயன்பெற முடியும். பழங்குடியின மாணவர்களுக்காக பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தும் தேசிய ஃபெலோஷிப் திட்டமும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய வகையில் உள்ளது. சிறுபான்மையின மாணவர்களின் உயர்கல்விக்காக பல்வேறு ஃபெலோஷிப் திட்டங்கள்  உள்ளதாலும் மெளலானா ஆசாத் தேசிய ஃபெலோஷிப் திட்டத்தின் பலன்கள் வேறு பல திட்டங்களிலும் உள்ளதாலும் மெளலானா ஆசாத் தேசிய ஃபெலோஷிப் திட்டத்தை 2022-23-ம் நிதியாண்டில் இருந்து  கைவிட அரசு முடிவு செய்தது.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply