பாரதப் பிரதமர் அவர்கள் சென்னையில் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைப்பது பாராட்டுக்குரியது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து
கோயம்புத்தூருக்கும் இயக்கப்பட இருக்கும் ‘வந்தே பாரத்’ ரயில் பயண நேரத்தை கணக்கில் கொண்டு, அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரயில்களின் பயண நேரத்தை, ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்

மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு

வணக்கம்.

மாண்புமிகு #பாரதப்பிரதமர் அவர்கள் சென்னையில் ‘#வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.

மத்திய அரசு, மக்களுக்கான போக்குவரத்தில் கவனம் செலுத்தியதால் இந்தியா முழுவதும் ‘வந்தே பாரத்’ என்ற புதிய அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி செயல்படுத்தி வரும் நேரத்தில் தமிழகத்திலும் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுவது உகந்த பணியை சரியான நேரத்தில் செய்வதற்கு சமமானது.

அந்த வகையில் வருகின்ற 8 (08.04.2023) ஆம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் 11 வது ‘வந்தே பாரத் ரயில் சேவையை தமிழகத்தில் சென்னையில் துவக்கி வைக்கிறார்.

இதற்காக பிரதமர் அவர்களுக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ‘வந்தே பாரத்’ ரயில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் இயக்கப்பட இருக்கிறது.

அதாவது கோயம்புத்தூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் தவிர வேறு எங்கும் நிற்பதில்லை. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோயம்புத்தூருக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் இயக்கப்படும் நேரத்திற்கு முன்பாக ஏற்கனவே நடைமுறையில் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15 மணிக்கும், மங்களூர் – சென்னை வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.25 மணிக்கும் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றடைகிறது. இதைக்கவனத்தில் கொண்டால் குறுகிய மணி நேரத்திற்குள் சில நிமிட நேரத்திற்குள் தொடர்ந்து அடுத்தடுத்து 3 ரயில்கள் இயக்கப்படும் என்பதால் இந்த வழித்தடத்தில் செல்லும் பிற ரயில்களின் புறப்படும் நேரத்தை மாற்றினால் அனைத்து துறை சார்ந்த மக்களும் ரயில் போக்குவரத்தில் முழு பயன் அடைவார்கள்.

மேலும் ஏற்கனவே நடைமுறையில் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், மங்களூர் – சென்னை வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட மற்ற ரயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்தால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, பொது மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே தமிழகத்திற்கு வரப்பிரசாதமாக கிடைத்திருக்கும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை த.மா.கா சார்பில் வரவேற்று, மத்திய அரசும், மத்திய ரயில்வே துறை அமைச்சகமும் ‘வந்தே பாரத்’ ரயில் செல்லும் வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயில்களின் பயண நேரத்தை, ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply