மத்திய எஃகு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிராதித்யா எம்.சிந்தியா, ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளுக்கான அமைச்சகம் (ISP) மற்றும் இரண்டாம் நிலை எஃகு தொழில்துறை (SSI) ஆகியவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட இரண்டு ஆலோசனைக் குழுக்களுடனான கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். ஆகஸ்ட் 2022-ல் உருவாக்கப்பட்ட இக்குழுக்கள், பங்குதாரர்கள் அனைவரும் ஒன்று கூடி, எஃகுத் துறை தொடர்பான முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு தளமாகச் செயல்படுகின்றன.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சிந்தியா, பசுமை எஃகு மூலம் உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இந்தியா மாற வேண்டுமெனக் கூறினார். மேலும் தொழில்துறையின் முன்னேற்றத்தை வரையறுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
“இந்தியாவில் நிலையான எஃகு தயாரிப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பசுமை எஃகு உற்பத்தி நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதோடு, புதிய வேலைகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்று ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்
எஃகு ஏற்றுமதி சந்தைகளில் இந்தியாவின் பெயரை மேம்படுத்தும் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பார்வையை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். இது தவிர, எஃகுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் 2.0ன் சாத்தியத்தை ஆராய்வது குறித்தும் இக்குழு விவாதித்தது. பிஎல்ஐ 1.0 திட்டத்தின் கீழ், எஃகு துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்க ரூ.6322 கோடிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எஃகு அமைச்சகம் 27 நிறுவனங்களுடன் 57 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
எம்.பிரபாகரன்