உலகிலேயே மாபெரும் திரைத் துறையாக விளங்கும் இந்திய திரைப்படத் துறை மிகச் சிறந்த உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய மையமாக விளங்குவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறது !- அமைச்சர் அனுராக் தாகூர்.

இந்திய திரைத் துறை உள்ளிட்ட கேளிக்கை துறையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக மத்திய அரசு தற்போது 3000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான இந்திய கேளிக்கைத் துறையை 7000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று தக்ஷின் – தென்னிந்திய ஊடக கேளிக்கை உச்சி மாநாட்டில் பேசிய அவர், விளையாட்டு மற்றும் திரைத்துறை ஆகிய இரண்டு துறைகளும் உலகளாவிய எல்லைகளைத் தாண்டி பயணிக்கக் கூடியவை என்று குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறைக்கான இந்திய திரைத்துறை வல்லுநர்களை உருவாக்கும் வகையில் அவர்களது தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கு இந்திய திரைப்படத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறினார்.

இன்றைய திரைப்படங்கள் சமூக விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகளையும் உண்மைத்தன்மையோடு பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். புதிய இந்தியாவைப் பற்றி உலகளாவிய ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நமது பிராந்திய திரைப்படங்களின் உள்ளடக்கங்கள், உந்து சக்தியாகவும் பகிரக் கூடியவையாகவும் அமைய வேண்டும் என்றார். நமது இளைஞர்களின் மனப்போக்கை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்ததாக நமது கதைக்களங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலகிலேயே மாபெரும் திரை துறையாக விளங்கும் இந்திய திரைத்துறை மிகச் சிறந்த உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய மையமாக விளங்குவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய திரைப்படங்கள் சட்டம் 2023 நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதாக கூறிய அமைச்சர் திரு. அனுராக் தாகூர், இந்த சட்டத்தின் வாயிலாக பைரசி என்று அழைக்கப்படும் கலைக்களவை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றார். கலைக்களவுக்கு எதிரான இந்திய திரைத்துறையின் அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக அளவில் இந்த கலைத் திருட்டு ஆண்டுதோறும் திரைப்படத்துறைக்கு சுமார் 20000 கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

கைபேசிகளில் காணொலி விளையாட்டுகளின் தேவைகள் அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புது டெல்லியில் நயநேர்த்தி மையம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தென்னிந்தியாவில் இது போன்ற மையம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைத்துறை தனது படைப்பாற்றல், தயாரிப்பு திறன், தொழில்நுட்ப வல்லமை, செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரங்களை பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஆர் ஆர் ஆர், த எலிபன்ட் விஸ்பர்ஸ் மற்றும் ஆல் தட் பிரீத்ஸ் ஆகிய படங்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றிருப்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த தருணத்தில் இந்திய கலாச்சாரத்தையும் அதன் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்படங்கள் உலகளாவிய உந்து சக்தியை வழங்கியிருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் தனுஷுக்கு யூத் ஐகான் விருதையும் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு ஐகான் விருதையும் அமைச்சர் வழங்கினார். தனுஷ் விருதை நேரில் பெற்றுக் கொண்ட நிலையில் சிரஞ்சீவிக்காக நடிகை சுகாசினி அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply