நகரங்களின் முக்கிய பருவநிலை நடவடிக்கைக்கு உதவ பெங்களூருவில் மாநாடு.

ஜி20 முன்னுரிமைகளை வடிவமைக்கும் முயற்சியில் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் பருவநிலை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான அடுத்த படிகளை உருவாக்கும் முயற்சியில்,   பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்கள்  பெங்களூருவில் “நகரங்களில் முக்கியமான பருவநிலை நடவடிக்கைகள்” பற்றி விவாதித்தனர். தற்போதைய ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் மூன்று (பருவநிலை நிதியுதவியை துரிதப்படுத்துதல், நீர் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையை ஊக்குவித்தல்) ஆகியவை விவாதப் பொருள்களாகும்.

பெருகிவரும் வெப்பம் மற்றும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய நகரங்கள் பருவநிலை நடவடிக்கையை துரிதப்படுத்துவது மற்றும் நாடுகள் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவது அவசியம் என்று பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். நிறுவன மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், பாதிக்கப்படக்கூடிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், புத்துயிர் பெறவும், முக்கிய ஒருங்கிணைந்த நகர்ப்புற நீர்வள மேலாண்மை, சமமான பாதுகாப்பான நீருக்கான அணுகலை உறுதி செய்தல் மற்றும் வெள்ளம் போன்ற நீர் தொடர்பான ஆபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நிலையான நகரங்களை உருவாக்க, புதுமையான மற்றும் உள்ளடக்கிய நகர வடிவமைப்பு முக்கியமானது. அதோடு, நிலையான வாழ்க்கைக்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்று இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், பொலிவுறு நகரங்கள் திட்ட இயக்குநருமான குணால் குமார் கூறினார்.

தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கான சி40 பிராந்திய இயக்குனர் ஸ்ருதி நாராயண், “இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நகரங்கள் பருவநிலை விஷயத்தில்  முன்னேறி வருகின்றன, ஆனால் அவை அவசரமாக தேவைப்படும் பருவநிலை நடவடிக்கைகளைத் தொடர்வதால் அவை தொடர்ந்து கடினமான திறன் தடைகளை எதிர்கொள்கின்றன. அதனால் நகரத்தின் கருத்துக்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியமானவை. இந்தக் கூட்டம் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு நமது பருவநிலைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தெளிவான அழைப்பாக செயல்படுகிறது.” என்றார்.

கர்நாடக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங், “பொது போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தி, நிலையான நகர்ப்புற உள்கட்டமைப்பில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளுக்கு சிவில் சமூகத்தின் பங்கு முக்கியமானது.” என்று கூறினார்.

21 ஏப்ரல் 2023 அன்று பெங்களூருவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) இணைந்து சி40 நகரங்களின் பருவநிலை தலைமைக் குழுவால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஜி20 தலைமையின் போது நகர்ப்புறத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது. யு20 இந்த ஆண்டு அகமதாபாத் நகரத்தால் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் முக்கிய குறிப்புகள் யு20 பரிந்துரைகளின் அறிக்கைக்கு பங்களிக்கும். இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜி20 பேச்சுவார்த்தை நடத்துவோருக்கு  வழங்கப்படும்.

நாடு மற்றும் பிராந்தியத்தில் உள்ள நகர அதிகாரிகள், நிபுணர்கள், நிதியளிப்பவர்கள், பங்காளிகள் உட்பட, கிட்டத்தட்ட 135 பேர் நேரில் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முழுமையான அமர்வுகள் மற்றும் இரண்டு பிரிவுகளில்  நகர பிரதிநிதிகள், நகர்ப்புற திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் பருவநிலை பிணைப்புகளை மேம்படுத்துவது என்ற கருத்துடன் நிறைவுற்றது.

திவாஹர்

Leave a Reply