ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட> பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டம், நகர்ப்புறங்களின் துப்புரவு துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, இணைச் செயலாளர் திருமிகு ரூபா மிஸ்ரா, ரைட்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் திரு ராகுல் மிதால் ஆகியோர் முன்னிலையில், இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையில் தொழில்நுட்ப உதவிக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி ரைட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு, நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு மூன்று ஆண்டு காலம் தொழில்நுட்ப உதவி வழங்கும். கழிவுநீர் மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு நடைமுறை உள்ளிட்ட துறைகளில் ஆதரவு அளிக்கப்படும். இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவுகளற்ற நகரங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு நிலையான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திவாஹர்