‘‘என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. என் ஆசை, என் அப்பா குடியை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்கிறேனோ, அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்’’ என்று தன் கை படவே உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு 16 வயது பள்ளி மாணவி தூக்குமாட்டி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ்நாட்டை மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு. இவரின் மனைவி கற்பகம். இந்தத் தம்பதிக்கு 17 வயதில் பிரகாஷ் என்ற ஒரு மகனும், 16 வயதில் விஷ்ணுபிரியா என்ற ஒரு மகளும் இருந்தனர். பிரகாஷ் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, மேற்படிப்பைத் தொடரவிருக்கிறார். விஷ்ணுபிரியா, சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள்பெற்று, 11-ம் வகுப்பு செல்லவிருந்தார்.
விஷ்ணு பிரியாவின் தந்தை பிரபு குடிக்கு அடிமையாகி கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை குடித்து அழித்து வந்துள்ளார். தினமும் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வரும் பிரபு, மனைவி மற்றும் குழந்தைகளிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இது பல ஆண்டுகளாக தொடர்கதையாகவே நடந்து வந்துள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் என்ன செய்வதென்றே தெரியாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தவித்து வந்தனர்.
தனது தந்தை பிரபுவின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரவே நிம்மதி இழந்த விஷ்ணு பிரியா மனம் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இத்துயர சம்பவம் குறித்து உண்மை தன்மை அறிவதற்காக குடியாத்தம் தாலுகா காவல்துறையினரை நாம் தொடர்பு கொண்டோம்.
‘கடிதம் எழுதி வைத்துவிட்டு அப்பெண் தற்கொலை செய்து கொண்டது உண்மைதான் என்றும், இதுகுறித்து வழக்கு பதிவு (FIR NO: 254/2023) செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தை கருத்தில் கொண்டு இனி நீட் தேர்வே கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. தன் தந்தையின் குடிப்பழக்கத்திற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட விஷ்ணு பிரியாவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?!
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040