அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய கோயிலில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் புனிதத் தருணத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘தற்சார்பு மற்றும் வளர்ந்த இந்தியா’ என்ற தீர்மானத்தை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் ஸ்ரீ ராம் மகோத்சவ், காதி சம்வத் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஹரியானாவின் சிவானி, ஜூம்பா ஆகிய கிராமங்களில் கிராமத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான கைவினைஞர்கள், பயனாளிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அயோத்தியில் ஸ்ரீ குழந்தை ராமரின் கும்பாபிஷேகத்தைப் பார்வையிட்டனர். பெரிய எல்இடி திரையில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் திரு பிப்லப் குமார் தேப், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், ஹரியானா அரசின் வேளாண் அமைச்சர் திரு ஜெய் பிரகாஷ் தலால் ஆகியோர் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு தேனீ வளர்க்கும் பெட்டிகள், தானியங்கி அகர்பத்தி இயந்திரங்கள், தோல் கருவி பெட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹரியானா அமைச்சர் திரு ஜெய் பிரகாஷ் தலால், ஹரியானாவில் ‘இரட்டை என்ஜின்’ அரசு விவசாயிகளின் நலனுக்காக குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளது என்று கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், கிராமப்புறங்களில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கொண்டு சென்றுள்ளது என்று அவர் கூறினார்.
எஸ் சதிஷ் சர்மா