தேர்தல் நெருங்கும் போதெல்லாம் அந்தந்த அரசியல் கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைவது வழக்கமான வாடிக்கை தான் என்றாலும், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்குள் தலைமைக்கு எதிராக உருவெடுத்துள்ள அதிகாரப் போட்டி, ஜாதிய பாகுபாடு மற்றும் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் அரசியல் அதிகாரம் இல்லாமல், மக்களின் பிரதிநிதித்துவம் பெறாமல் தனித்து நின்று தேர்தலை சந்திக்க முடியும்?! சீமானின் சுயநலமும், பிடிவாத குணம் தான் அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது என்ற விமர்சனமும், நாம் தமிழர் கட்சிக்குள் ஒரு குறிப்பிட்ட நபர்களின் ஆதிக்கம் தான் அதிகரித்து வருகிறது என்றும், குறிப்பாக சீமானின் மனைவி தலையீடு கட்சிக்குள் அதிகமாக உள்ளது என்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சீமான் மற்றும் அவரது மனைவி மீது அதிருப்தியில் இருக்கும் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் செல்வாக்குள்ள முக்கிய நிர்வாகிகளை அக்கட்சியில் இருந்து வெளியேற்றி, சீமானுக்கு எதிராகவும், அவரது மனைவிக்கு எதிராகவும் பொதுவெளியில் விமர்சனம் செய்வதற்கு பிரதான முக்கிய அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும்,, அக்கட்சியின் வாக்கு வங்கியையும், சீமானின் செல்வாக்கையும் எப்படியாவது சிதைத்து விட வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் முக்கிய திட்டமாக இருக்கிறது.
அந்த சதியில் ராஜா அம்மையப்பனும் சிக்கியதின் விளைவுதான் அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணம். ஏதோ இந்தியாவில் இருக்கிற அரசியல் கட்சிகளில் எல்லாம் ஜனநாயகமும், கருத்து சுதந்திரமும் தலை விரித்து ஆடுவதைப் போலவும், சீமான் ஒருவர் மட்டும் தான் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதைப் போலவும் ராஜா அம்மையப்பன் கட்சியில் இருந்து விலகியதற்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஓட்டு அரசியல் என்று வந்துவிட்ட பிறகு வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்குவதெல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில் இதை ஒரு காரணமாக தெரிவித்து இருப்பது அவர் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது.
சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவி ஏற்பதற்கு முன்னதாகவே பதவி விலகலுக்கான கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டுதான் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே பிழைப்பு நடத்தி வருகிறது. இது தெரியாமல் ராஜா அம்மையப்பன் புலம்பி கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.
சீமானை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும் சமயம் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம் சீமானை கூட்டணி வளையத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் தமிழர் கட்சியை சிதைக்க வேண்டும். இந்த சிந்தனையோடு தான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அங்கு வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலும் சீமானுக்கு சோதனைக் காலமாகத்தான் நிச்சயம் இருக்கும்.
எதிரி என்றைக்கும் எதிரி தான்; ஆனால், அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது உறவுகளும், நட்புகளுமே! என்பதை சீமான் உணரும் காலம் வந்துவிட்டது. ஏனென்றால், பேச்சு பெரிதுதான்; ஆனால், செயல் அதைவிட பெரிது என்பதை சீமான் இனியாவது உணர வேண்டும்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜா அம்மையப்பன், அக்கட்சியிலிருந்து வெளியேறுவதாக எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை 23.02.2024 அன்று வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புடன் எனது அனைத்து நாம் தமிழர் உறவுகளே.. அனவருக்கும் வணக்கம். கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்.
நாம் தமிழர் கட்சியில் இரண்டு முறை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி எனக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த எனது தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்தோடு பிரிகிறேன். உங்களுடன் நான் பயணித்த காலங்கள் எனது வாழ்வின் முக்கியமான காலமாகவும், இனிமையான வசந்த காலமாகவும் என்னி மகிழ்ச்சி கொள்கிறேன்.
நான் உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். வருத்தமடைய செய்யலாம். ஆனால், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூக படுகொலைகளையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விருப்பமில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விருப்பமில்லை
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்துள்ளார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா? வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்திருக்கிறீர்களா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வந்தேன். பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளராகவும், துணைச் செயலாளராகவும் நியமித்து இருப்பதாக கூறப்படுவது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடு உள்ளதா? அண்ணன் அருகில் உள்ள மூன்று பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னதான் எனக்கு வருத்தம் இருந்தாலும், என்னை சீமான் அவர்கள் 8 ஆண்டுகளாக கண்ணியமாக நடத்தி, எனக்குரிய மரியாதையை எனக்கு கொடுத்து சிறப்பித்தமைக்கு என்றைக்கும் நன்றியுணர்வோடு இருப்பேன். தமிழ் தேசியம் ஒருநாள் வெற்றிபெறும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன். வாழ்க தமிழ் தேசியம். வாழ்க நாம் தமிழர் கட்சி என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040