சிகரெட் விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்! தமிழக அரசுக்கு மருத்துவர்அன்புமணி கோரிக்கை!

Dr.Anbumaniகடைகளில் வைக்கப்பட்டுள்ள சிகரெட் விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று பசுமைதாயகம் தலைவர் மருத்துவர் அன்புமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியப் புகையிலைக் கட்டுப்பாடு சட்டம் 2003-இன் கீழ் அனைத்து விதமான புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இச்சட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. சிகரெட் விற்கும் கடைகாரர்கள் 60×45 சென்டி மீட்டர் அளவு உள்ள ‘இங்கு புகையிலைப் பொருட்கள் விற்கப்படும்’ என்ற அறிவிப்பு பலகை மட்டுமே வைத்துக்கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏராளமான கடைகளில் சிகரெட் நிறுவனத்தினர் பெரிய விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். இவ்வாறு விளம்பரப் பலகைகள் வைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

பலகையின் அளவு 60 செ.மீ.x45 செ.மீ. அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். அதைவிட பெரியதாக இருக்கக்கூடாது. அந்தப் பலகைக்கு உள்ளே 20 செ.மீ.x15 செ.மீ அளவுக்கு ‘புகையிலை உயிரைக் கொல்லும்’ அல்லது ‘புகையிலை புற்று நோயை உண்டாக்கும்’ என்கிற அறிவிப்பு இருக்க வேண்டும்.

பலகையில் ‘இங்கே கிடைக்கும் புகையிலைப் பொருட்களின் பட்டியல்’ எனக் குறிப்பிட்டு ‘பீடி, சிகரெட் கிடைக்கும்’ என்பதை மட்டுமே எழுத வேண்டும். சிகரெட் பெட்டிகள், பெயர், படம் போன்ற எதுவும் இந்த விளம்பரத்தில் இடம் பெறக்கூடாது. மேலும், கடைக்கு உள்ளே சிகரெட் பெட்டிகளை அடுக்கி விளம்பரம் போன்று வைப்பது குற்றம்.

மேற்கண்ட விதிமுறைகள் தமிழ்நாட்டில் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களுக்கு இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

எனவே, தமிழ்நாட்டில் சட்டத்திற்கு மாறான வகையில் வைக்கப்பட்டுள்ள புகையிலை நிறுவனங்களின் விளம்பரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார்.

Leave a Reply