டார்பிடோ அமைப்பு சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை 08.30 மணியளவில் ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஸ்மார்ட் என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக டார்பிடோ விநியோக அமைப்பாகும். இது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்த ஏவுகணை அமைப்பு பல மேம்பட்ட துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இரண்டு-நிலை திட உந்துவிசை அமைப்பு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்சுவேட்டர் அமைப்பு, துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பு போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு மேம்பட்ட இலகுரக டார்பிடோவை பேலோடாகவும், பாராசூட் அடிப்படையிலான வெளியீட்டு அமைப்பாகவும் கொண்டு செல்கிறது.
இந்த ஏவுகணை தரையில் இருந்து ஏவப்பட்டது. சமச்சீர் பிரிப்பு, வெளியேற்றம் மற்றும் திசைவேகக் கட்டுப்பாடு போன்ற பல அதிநவீன வழிமுறைகள் இந்தச் சோதனையில் சரிபார்க்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். “இது நமது கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், ஒட்டுமொத்த ஸ்மார்ட் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பாராட்டியதோடு, சிறப்பான பாதையில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
எம்.பிரபாகரன்