மத்திய சுரங்க அமைச்சகம், தன்பாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் – இந்திய சுரங்கப் பள்ளி (ஐஐடி-ஐஎஸ்எம்) உடன் இணைந்து தில்லியில் நாளை அதாவது மே 8, 2024 அன்று ஒரு நாள் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலங்களின் சுரங்கத் துறை செயல்திறனின் அடிப்படையிலான மாநில சுரங்கக் குறியீட்டின் வரைவு கட்டமைப்பைப் பற்றி விவாதிக்க இது திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல். காந்த ராவ் தலைமையில் நடைபெறும் இந்தப் பயிலரங்கில் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
சுரங்கத் துறை பல மதிப்புச் சங்கிலிகளில் முன்னணியில் உள்ளது, எஃகு, இரும்பு அல்லாத உலோகங்கள், சிமெண்ட், உரங்கள், ரசாயனங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கிய தொழில்துறை களங்களுக்கு மூலப்பொருட்களை வழங்குகிறது. நாட்டின் சுரங்கத் துறையின் வளர்ச்சியில் மாநிலங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமநிலை, நிலைத்தன்மை மற்றும் பொறுப்புடன் வள பயன்பாட்டு செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சுரங்கத் துறை பார்வைக்கு, இந்தியாவின் புவியியல் ஆய்வில் கவனம் செலுத்த வேண்டும்; சுரங்க அகழ்வு தொடர்பான செயற்பாடுகளினால் பாதிக்கப்படும் நபர்கள் மற்றும் பிரதேசங்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தகைய தேசிய முயற்சியில், ஒரு மாநிலத்தின் ஒப்பீட்டளவிலான பங்களிப்பு முக்கியமானது என்பதுடன், அது பிரதிபலிக்கப்பட வேண்டும். எனவே, சுரங்கத் துறையின் செயல்திறன் மற்றும் சுரங்க நடவடிக்கைகளில் மாநிலங்களின் எதிர்கால தயார்நிலை ஆகியவற்றை அறிய மாநில சுரங்கக் குறியீடு திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் அல்லாத முக்கிய தாதுக்கள் மற்றும் சிறிய தாதுக்கள் குறியீட்டின் வரம்பாக இருக்கும். கட்டமைப்பை வடிவமைத்தல், தரவுகளைச் சேகரித்தல் மற்றும் குறியீட்டை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான ஆய்வை நடத்த தன்பாத்தில் உள்ள ஐ.ஐ.டி-ஐ.எஸ்.எம்., நிறுவனத்தை சுரங்க அமைச்சகம் நியமித்துள்ளது.
இந்தச் செயல்முறையை வெளிப்படையானதாகவும், நடுநிலையானதாகவும் மாற்றுவதற்காக, குறியீட்டு மேம்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் தில்லியில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. பயிலரங்கில் மாநிலங்களின் கருத்துக்கள் கட்டமைப்பை இறுதி செய்ய உதவும்.
எஸ்.சதிஸ் சர்மா