வெப்ப அலை பாதிப்பை தடுப்பதற்கு மத்திய அரசின் துறைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநரும், தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு அபூர்வ சந்திரா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்புடன் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் வெப்ப அலை குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் தொடர்ந்து ஒலிபரப்பப்படுவதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் வெப்ப அலை நிலைமை குறித்தும், காட்டுத் தீ, மருத்துவமனைப் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம், மண்டல வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் வெப்ப அலை தடுப்புக்கான செயல் திட்டத்தை அவ்வப்போது உருவாக்கி மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். காட்டுத் தீயை கையாள்வது எப்படி என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மருத்துவமனைகளில் மின்கசிவால் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், வெப்ப அலை பாதிப்பிலிருந்து பாதுகாத்துகொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு கேட்டு கொண்டார். மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு கட்ட தேர்தல் தேதிக்கு முந்தைய ஐந்து நாட்களில் வெப்ப அலையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். செல்பேசி செயலிகளில் மௌசம் செயலிலை பதிவிறக்கம் செய்து கொண்டு வெப்ப அலை தொடர்பான சிறப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் பேசுகையில், நாட்டில் உள்ள பெரும்பாலான சமவெளிப்பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பம் காணப்படும் என்று தெரிவித்தார்.
சி.கார்த்திகேயன்