இந்தியா – மங்கோலியா பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான 12-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் 2024 மே 16-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டம் இன்றும் நடைபெறுகிறது. நேற்று (16.05.2024) தொடங்கிய இந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத், மங்கோலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் கன்குயக் தவக்டோர்ஜ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மங்கோலியாவுக்கான இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சுர்வே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.
பல்வேறு இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ததுடன், ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர். தற்போதைய புவிசார் அரசியல் சூழல்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மங்கோலியாவுடன் இந்தியா பழமையான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆன்மீக நட்பு நாடுகளாகக் கருதுகின்றன.
நவீன காலத்தில், ஜனநாயகம், சுதந்திரம், சந்தைப் பொருளாதாரம் போன்றவற்றில் உள்ள ஒரே மாதிரியான மதிப்புகள் இரு நாடுகளையும் நெருக்கமாக வைத்துள்ளன.
எஸ்.சதிஸ் சர்மா